புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு பரப்புரையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார் . இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் குறித்து மாணவிகளுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு விளக்கங்களை கூறினார். மேலும், சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்தும் தங்களை எவ்வாறு நோயிளிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் மருத்துவ அலுவலர்கள், மாணவிகளுக்கு செய்து காண்பித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்: “காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். நோய் தாக்கம் ஏற்படும் நோயாளிகளுக்கு எவ்வாறு மருத்துவம் செய்வது என்பது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறையின் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரனா வைரஸ் பற்றியும் அதற்கான மருத்துவ முறை குறித்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் . கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எந்த முறையில் சிகிச்சை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சுகாதாரத் துறையின் சார்பில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் பரவி விடாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதகையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு