அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையினை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்.
அந்தவகையில் கிள்ளுக்கோட்டை பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று இன்றைய தினம் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையின் மூலம் கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, புலியூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 26 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இதற்கு முன்பு இப்பகுதி பொதுமக்களுக்கு கீரனூர், அண்டகுளம், செங்கிப்பட்டி ஆகிய தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டுவருகிறது.
தற்பொழுது இந்தப் பகுதியிலேயே புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பிரசவம், விபத்து போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள் இச்சேவையினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று விரைவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் இப்பகுதி பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கோரிக்கையினை ஏற்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்பொழுது பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதலமைச்சரால் இத்திட்டம் விரைவில் அடிக்கல் நாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும்" என்றார்.