புதுக்கோட்டை: தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடக்க விழா மற்றும் தொகை பெறப்போகும் பெண்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தையும், ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ‘இன்று பெண்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான நாள். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை இன்று முதல் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மாதந்தோறும் நடைமுறையில் இருக்கும். பெண்களின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்காகவும், வாழ்க்கைப் பாதையை முன்னேற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்துள்ளது.
அதேபோல், நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மற்றும் தெரிவிக்காத திட்டங்களை செயலாற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் வசைபாடுவார்கள் எனவும், அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நோக்கம் என்பது, மக்கள் நலன் மற்றும் மக்களுக்காக பாடுபடுவது.
இந்தத் திட்டத்தில் பயன் பெறாதவர்கள் மேல் முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழக அரசு போராடி, காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்றுத் தரும். யார் அங்கே ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு எதிர்ப்பான மனநிலையைத்தான் எடுப்பார்கள். தமிழக அரசைப் பொறுத்தவரை விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருகவிடாமல் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து நீரை பெற்றுத் தரும்.
பயிர்க் காப்பீடு அனைத்து பயிர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், நீதிமன்றம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீது குற்றச்சாட்டு கூறியுள்ளன. இது குறித்து விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்.
நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் தானாக முன்வந்து வழக்குகளை எடுத்துள்ளன. அந்த விசாரணை என்பது நியாயமான முறையில் எங்களுடைய விசாரணை நடைபெற்றுள்ளன என்று லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை எடுத்துச் செய்யும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கில் விசாரணை செய்யாமல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் திமுக ஆட்சியில் வழக்கு விசாரணை நடைபெற்று சாட்சியங்கள் இல்லாததால் வழக்குகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் விடுதலை குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை’ என்றார்.
இதையும் படிங்க:வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போதைப் பொருள் பயன்படுத்திய மாணவர்கள்: மாவட்ட எஸ்.பி விசாரணை!