புதுக்கோட்டை: ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்துவிடுதி தெற்குப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மயிலத்தம்மன் கோயில் கிடாவெட்டு பூஜையில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து தன் உறவினர் வீட்டிற்கு தனலட்சுமி மற்றும் அட்சயா என்ற இரண்டு சகோதரிகள் குடும்பத்துடன் வந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள மிகவும் ஆழமான பிள்ளையார் கோயில் குளத்தில் ஆழம் அறியாமல் குளிக்க இறங்கியபோது, இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது அவர்கள் சத்தம்கேட்டு வந்த, அதே ஊரைச் சேர்ந்த அந்தச் சிறுமிகளின் சித்தப்பா அதாவது ஆனந்தகுமார் என்ற இளைஞர் நீரில் குதித்து, அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவிழாவிற்கு வந்த குழந்தைகளும், அவர்களை காப்பாற்றச் சென்ற இளைஞரும் என மூன்று பேரும் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர்கள் மூவரின் உடல்களும் உடல் கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
மேலும் இந்தச் சம்பவம் அறிந்து ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான மெய்யநாதன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவமனைக்கு வருகை தந்து உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தி, நிதியுதவியும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “தற்போது விடுமுறை என்பதால் கோயில் திருவிழாவில் வழிபடுவதற்காக 30-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அதில் இரண்டு குழந்தைகள் அட்சயா (15), தனலட்சுமி (13) மற்றும் ஆனந்தகுமார் (27) ஆகிய மூன்று பேரும் எதிர்பாராத விதமாக பள்ளத்துவிடுதி பகுதியில் இருக்கின்ற குளத்திலே உள்ள நீரில் மூழ்கிய காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நீர்நிலைகளில் குளிப்பதை பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். இச்சம்பவம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்’’ எனத் தெரிவித்தார்.
மேலும், ’’புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஆழம் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி, முறையான விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க தற்காப்பிற்காக நீச்சல் கற்றுக் கொள்வது சிறந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள 80 சதவீதம் பேர் தான் நீச்சல் தெரிந்து வைத்துள்ளனர். அது போல நகர்ப்புற சிறுவர், சிறுமிகளுக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” எனத் தெரிவித்தார்.