புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் உத்தரவுப்படி கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் பொருட்டு, ஒட்டு மொத்த நிர்வாகமும் களப்பணியில் இறங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து முதலமைச்சர் பதிலளிப்பார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையால் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு சரியாகிவருகிறது. 15 நாள்களுக்குள் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும்.
நெடுவாசல், ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது நேரடியாக களத்தில் இறங்கி போராடியது திமுக.
ஆகவே, நெடுவாசல் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கு என்மீது கூட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி : ராமதாஸ் வரவேற்பு