புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டிற்கு நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கென ரூ.18.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 760 கண்மாய்கள், நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்பட்டு, இதன் பயனாக 17 ஆயிரத்து 66.38 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது.
இதன் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டிற்கு நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான்காயிரத்து 558 ஹெக்டேர் பரப்பளவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைக்க, ரூ.18.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.1.56 கோடி மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வேளாண்மைத்துறையின் மூலம் பிரதம மந்திரியின் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 802 விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஐந்து தவணைகளாக தலா இரண்டாயிரம் வீதம் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனம், கூட்டுப்பண்ணைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், வேளாண் பொறியியல் துறையின் சார்பில், வேளாண்மை இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்ற வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.
சோலார் பம்பு செட் ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு மானிய விலையில் அமைக்கப்பட்டும்; செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெற்றிட அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகலாம்” என்று அந்த அறிவிப்பில் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.