புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "10ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 வரை நடைபெற உள்ளது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் அரசு பொதுத் தேர்வை சிறந்த முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று இக்கூட்டத்தில் கல்வித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை அறந்தாங்கியில் 7,206 தேர்வாளர்கள், 114 தேர்வு மையங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,901 தேர்வாளர்கள், 120 தேர்வு மையங்களிலும், இலுப்பூரில் 6,548 தேர்வாளர்கள், 99 தேர்வு மையங்களிலும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,655 தேர்வாளர்கள், 333 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு தேர்வுகளில் ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் 20 தேர்வாளர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்பொழுது ஒரு தேர்வுக் கூடத்தில் 10 தேர்வாளர்கள் மட்டும் தகுந்த இடைவெளியுடன் தேர்வு எழுதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற வரும்போதே தேர்வாளர்களுக்கு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தம் வகையில் 3 முகக் கவசங்கள் வழங்கி தேர்விற்கு வரும் பொழுது முகக் கவசம் அணிந்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வாளர்கள் வருகை புரிய நேர்ந்தால் அவர்களுக்கென ஒன்றியம் வாரியாக தலா ஒரு சிறப்பு தேர்வு மையம் என 13 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்விற்கு வருகை புரியும் அனைத்து தேர்வாளர்களையும் வெப்பமாணி கொண்டு காய்ச்சல் உள்ளதா என்பதை சோதனை செய்த பின் தேர்வுக் கூடங்களில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வின்போது அனைத்து தேர்வு மையங்களுக்கும் தனித்தனி கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 225 பறக்கும் படைகளும் அமைக்கப்பட உள்ளன.
தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் மூன்று விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பொதுத் தேர்வு நடைபெறும் நாள்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ளவும், கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்தவும், மேலும் இதுபோன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.