புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேவுள்ள நெற்புகை கிராமத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி அழகப்பன் (48). இவர் மீது புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடு திருடிய பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி கறம்பக்குடி அருகேவுள்ள திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, ஏலக்காய் விடுதி, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஆளில்லாத நேரத்தைப் பயன்படுத்தி காரில் அழகப்பன் ஆடுகளை தொடர்ந்து திருடி வந்துள்ளார்.
இதுகுறித்து கறம்பக்குடி காவல்துறையினருக்கு தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில், நேற்று (ஜூன் 6) அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், பொது முடக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள் என்பதை அறிந்து வயல்களில் மேயும் ஆடுகளை தனது காரில் சென்று கடத்திவந்து அதை இறைச்சியாக விற்பனை செய்து வந்ததாகவும், கார் என்பதால் தன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வழிப்பறி திருடர்கள் கைது!