புதுக்கோட்டை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கம்பன் கழகம் சார்பில் அதன் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுக்கோட்டை, சின்னப்ப பூங்கா அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கம்பன் கழக நிர்வாகிகள் சம்பத் குமார், ராமதாஸ், ராமுக்கண்ணு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஏற்றுக் கொண்டது தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி' என்றார்.
மேலும், ஈஷா சென்று திரும்பிய சுபஸ்ரீ மரண வழக்கு குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது,' காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. அண்ணாமலையை கர்நாடகாவில் போய் எந்த வழக்கு இருந்தாலும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்’ என்று கோபத்துடன் சென்றார்.
பின்னர் எந்த மாவட்டத்திலும் செய்தியாளர்கள் இது போல் கேள்வி கேட்பதில்லை என்றும்; புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இது போன்று சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்கின்றார்கள் என்றும் செய்தியாளர்களை கோபத்துடன் பேசிவிட்டும் அமைச்சர் ரகுபதி அங்கிருந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜி20 கூட்டமைப்பின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் புனேயில் தொடக்கம்