புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "ஊரடங்கை நீடித்திருப்பது என்பது எதிர்பார்த்ததுதான். தடுப்பூசி போடுவது மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழி. தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது உண்மை.
அதற்கு காரணம் ஒன்றிய அரசு. மாநிலங்கள் தன்னிச்சையாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியாது. ஒன்றிய அரசு மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசே குத்தகைக்கு எடுப்பதற்கு ஒன்றிய அரசிடம் மனு அளித்துள்ளது. மனு மீது மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். தற்போதைய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலை எடப்பாடி பழனிசாமி விட்டு சென்றார்.
தற்போதைய அரசு பொறுப்பேற்று மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளது. அதற்குள் விமர்சனங்களை ஏற்க கூடியது அல்ல, சிறிது காலத்திற்காவது எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி : ராமதாஸ் வரவேற்பு