புதுக்கோட்டை: கண்ணங்காரைக்குடியில் புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்குட்பட்ட தர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இங்கு மங்கள இசை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் ஆறு கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
நான்கு நாட்களாக யாகசாலை வளர்க்கப்பட்டதோடு பல்வேறு புனித தளங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்களால் பூஜிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க யாகசாலையில் வளர்க்கப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்களால் சுமந்து வரப்பட்டு கும்பத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவைக்காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5,000-க்கும் மேலானோர் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமயம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தர்மசாஸ்தா நற்பணி மன்றத்தார், கண்ணங்காரைக்குடி ஊரார், தேவஸ்தான அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை...