இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நிகழ்வு கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதற்காக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இந்நிகழ்வை பலர் விமர்சனம் செய்தனர். அதில் ஒருவர், கட்டி வைக்கப்பட்டிருந்த குரங்கின் உடலில் நரேந்திர மோடியின் தலையை பொருத்தி கேலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.
மேலும் அந்த புகைப்படத்தோடு, "மாமல்லபுரத்தில் சுற்றித் திரிந்த திருட்டு குரங்கை மக்கள் தர்ம அடிகொடுத்து கட்டி வைத்தபோது எடுத்தபடம்" என்றும் பதிவிட்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன், மணமேல்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அங்கு சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிவபாலன் கூறுகையில், "பிரதமர் மோடி அவர்களை இப்படி விமர்சனம் செய்திருப்பது தேச துரோகம் என்று நாங்கள் கருதுகிறோம். இப்படி கேலி செய்தது சரியல்ல. விரைவில் அந்தக் கேள்வி படத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். புதுக்கோட்டையைத் தொடர்ந்து இதேபோல், கன்னியாகுமரியிலும் புகாரளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: