புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அலுவலர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் அரசு நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டம் மூலம் 60 நாள்கள் அவகாசம் கொடுக்கும் மனுக்களுக்கு 40 நாள்களிலேயே தீர்வு காணப்பட்டுவருகிறது. 29 லட்சம் பேருக்கு இதுவரை முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மேலும் ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்.
கரிகாலச் சோழனுக்குப் பிறகு குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். குடிமராமத்துப் பணிகளின் மூலம் குறைவான மழை பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் 31 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை 1500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது 4,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் கல்வித் துறைக்கு 14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 34 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் எந்த ஒரு வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளது” எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, ஆறுமுகம், புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடினர்.
இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா!