தமிழ்நாட்டில் மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஆண், பெண் மற்றும் இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 088 வாக்காளர்கள் இடம் பெற்றனர். ஆங்காங்கே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் ஏதும் பிரச்சனையின்றி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.
முதல்கட்ட வாக்குப்பதிவில் விராலிமலை ஒன்றியம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும் மற்ற ஊராட்சி ஒன்றியங்களான அறந்தாங்கியில் 54.11 விழுக்காடு, திருமயத்தில் 68.21 விழுக்காடு, ஆவுடையார்கோவிலில் 71.49 விழுக்காடு, பொன்னமராவதியில் 72.39 விழுக்காடு, திருவரங்குளத்தல் 80.41 விழுக்காடு, மணமேல்குடியில் 65.45 விழுக்காடு, அரிமளத்தில் 73.85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதிகபட்சமாக திருவரங்குளம் ஒன்றியத்தில் 80.41 விழுக்காடு வாக்குகளும் குறைந்தபட்சமாக அறந்தாங்கியில் 54.11 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்தமாக 69.05 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டையில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிகளவில் பெண்கள் போட்டியிட்டனர். அதேபோல சலிப்பின்றி அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
குறிப்பாக 100 வயதை கடந்த பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழில் செய்வதற்காக சொந்த ஊரை விட்டு நாடு கடந்து சென்றவர்கள், தொழு நோயாளிகள் என அனைவரும் மிக ஆர்வமுடன் தங்களது வாக்ககினை பதிவு செய்தனர். ஆக மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் வெற்றி பெறும் வேட்பாளர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களிடமும் இருந்தது.