புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நீண்ட ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 2 லட்சம் மதிப்பிலான பீரோ, நாற்காலிகள், எழுதுப்பொருட்கள், புத்தகங்கள், மின் விசிறி, ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களைப் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கல்வி சீரை மேளதாள இசை முழக்கத்தோடு ஊர்வலமாக எடுத்து வந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். அவர்களை வரவேற்கும் விதமாகப் பள்ளி மாணவர்கள் வண்ண ஆடைகள் அணிந்து பன்னீர் தெளித்து கைத்தட்டி உற்சாகமாக நடனமாடி வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, தனது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியை இந்த பள்ளியின் பயன்பாட்டிற்காக வழங்குவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாகத்தோடு கைத்தட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா: கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி!