புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில், இன்றைய தினம் இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் ரூ.58.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதில், அறிவியல் ஆய்வகம், இ-நூலகம், கலை மற்றும் நெசவுக் கூடம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் எழிலுற கட்டப்பட உள்ளது. இப்பள்ளி 2019-20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், புதிய நீதிமன்றம், சமுதாய கூடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பயணியர் மாளிகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அரசின் இதுபோன்ற திட்டங்களை பள்ளி மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு 6ஆவது முறையாக முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்