புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியின் எதிரே அம்பேத்கர் மாணவர் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு, அக்கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் விடுதியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், தினந்தோறும் வழங்கும் உணவுகள் தரமற்றதாகவும் இருப்பதாக கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் எடுத்துக் கூறியுள்ளனர்.
ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று (பிப்.17) காலை உணவு இட்லி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் என்ற பெயரில் தரமற்ற உணவு வழங்கியதாக கூறி உணவு பாத்திரத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக உணவு வழங்குவதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் பணிக்கு மீண்டும் போட்டித் தேர்வு - அரசாணையை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்