புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மலம்பட்டி கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இரண்டு சிவன் கோயில்களும், அதற்கான மண்டபமும் கல்வெட்டுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் கிபி 1010ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த, முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவன், நந்தி, பெருமாள், துர்க்கை, ராஜராஜ சோழன், அவரது மனைவி பூஜை செய்வது போன்ற சிலை, பழங்காலத்து தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், தமிழ் வட்ட எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகள், உள்ளிட்ட பல்வேறு சிலைகள், கட்டுமான அமைப்புகள் அழிந்த நிலையில் காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எடிசன் என்பவர் கூறுகையில், “இங்குச் சிலைகள் இருக்கிறது என்று கடந்த ஆண்டே நாங்கள் கேள்விப்பட்டோம். நானும் எனது நண்பர்களும் வந்து பார்த்தபோது ஓரளவிற்கு முடியாத நிலையில் கோயில்களும் 12க்கும் மேற்பட்ட சிலைகளும் இருந்தது. ஆனால் இப்போது இரண்டு மூன்று சிலைகள் தான் இருக்கிறது. அனைத்தையும் திருடிவிட்டார்கள். காணாமல் போன சிலைகள் உட்பட இங்குக் கிடக்கும் சிலைகளைப் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவில்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை மட்டுமல்லாது, பொதுமக்களும் தவறிவிட்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகளை மீட்டுப் பாதுகாக்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு வரலாற்றுச் சரித்திரங்கள் இருக்கிறது” என கூறினார்.