புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில்,“சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அதன் சுற்று வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டு இஸ்ரோ மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
அதேபோன்று சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக நேற்று (செப்.2) ஆதித்யா L1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனைகளைப் படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோவில் பணியாற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த சாதனையை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வரும் நிலையில், சீனா இதுவரை பாராட்டு தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகளை ஒரு சிலர் கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர் எனவும் கூறினார்.
மத்திய அரசு திட்டமிட்டுள்ள “ஒரே நாடு ஒரே தேர்தல்” வரவேற்கத்தக்கது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும் எனவும், தேர்தல் செலவுகள் மிச்சமாகும் எனவும், இந்த திட்டத்தைச் சிலர் எதிர்ப்பதாகவும் கூறினார். வருகின்ற ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், இதிலிருந்து அரசு பின்வாங்கக் கூடாது என்றார்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்துவிட்டு வெற்றியை எட்டு விடலாம் என நினைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் இந்த திட்டத்தை எதிர்க்கிறது எனக் கூறினார். மேலும், போலிகளை ஒழிப்பதற்காக ஆதார் அட்டை கொண்டு வந்த போதும், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைக்கும் போதும் திமுக எதிர்த்தது. இவற்றையெல்லாம் இணைத்து அதன் மூலமாக “டிஜிட்டல் இந்தியா” உருவாகி போலிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் எதிர்த்தவர்கள் தற்போது “ஒரே நாடு ஒரே தேர்தலை” எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு இல்லை என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாநாட்டில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது எனவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது எனவும், உடனடியாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
மேலும், இவர்கள் கிறிஸ்தவ ஒழிப்பு மாநாடு மற்றும் முஸ்லீம் ஒழிப்பு மாநாடு ஆகிய மாநாடுகள் நடத்தினால் இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்வார்களா? எனக் கடுமையாகச் சாடினார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் செ.7ல் இந்து மக்கள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை மனு மற்றும் புகார் மனு வழங்கப்பட உள்ளது எனக் கூறினார்.
இன்பநிதி பாசறை போஸ்டர் குறித்த கேள்விக்கு, இன்பநிதி பாசறை என போஸ்டர் ஓட்டிய புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு திமுக நிர்வாகிகள் மீது அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது ஒரு நாடகம் உதயநிதிக்கு அடுத்தபடியாக அவர்தான் திமுகவை வழி நடத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி எனவும், வாரிசு அரசியலையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்றார்.
ஓணம் பண்டிகை வாழ்த்து குறித்த கேள்விக்கு, மலையாள இந்து பண்டிகையான ஓணத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லுவார் எனவும், தமிழக இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்ல மாட்டார் எனவும், திமுக தலைவராக இதுபோன்று அவர் செயல்படலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் இவ்வாறு செயல்படுவது அவர் வகுத்து வரும் பதவிக்கு நல்லதல்ல என்றார்.
இதையும் படிங்க:சனாதனத்தைப் பற்றி திமுகவிற்கு என்ன தெரியும்? - டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!