ஏற்றத்தாழ்வாக இருக்கும் இச்சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குக் கல்வி அதிமுக்கிய ஆயுதமாக விளங்கும் என அண்ணல் அம்பேத்கர் கருதினார். ஆனால், இந்தக் கல்வியைப் பல்வேறு காரணங்களால் பெறமுடியாமல் பல மாணவர்கள் இன்றளவும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். பொருளாதாரப் பிரச்னைகள், சூழ்நிலைக் காரணங்கள் உள்ளிட்டவை சிலருக்கு கல்வி கற்கத் தடையாக அமையும்.
ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியறிவைப் பெற தடையாக இருப்பது சாதிச் சான்றிதழ் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், பொதுச் சமூகத்தால் ’பூம்பூம் மாட்டுக்காரர்கள்’ என்றழைக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவருக்குக்கூட இன்றுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் விளைவாக அவர்களால் உயர் கல்வியை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை இருக்கிறது.
உயர் கல்வி கனவு கானலாகி வேதனையில் திளைத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலரிடம் பேசுவதற்காகப் புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரம் காந்தி நகருக்குச் சென்றோம். ஊருக்குள் நுழைந்ததும் நாசியில் ஏறும் துர்நாற்றமும், சுகாதாரமற்ற இடமும் நம்மை வரவேற்றன. இதுபோன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் இடத்தில்தான் நீண்டகாலமாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அம்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் முதல்முறையாகக் கல்லூரிப் படிப்பைப் முடித்தவன் நான்தான் என பேசத் தொடங்கிய பொறியல் கல்லூரி மாணவர் சின்னமுத்து, ”எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் நல்ல படிக்கனும்னு விரும்புறாங்கா. ஆனால், எங்களுக்குச் சாதிச் சான்றிதழ் இல்லாததால நிறைய பேர் படிப்ப பாதியிலே நிறுத்திட்டாங்க.
நல்ல உணவு, உடை, இருக்க இருப்பிடம் இந்த மூனும்தான் மனிதனோட அடிப்படைத் தேவைனு சொல்லுவாங்கா. ஆனா, நாங்க இருக்கிற இடத்தப் பாருங்க சுத்தமான இடம் கிடையாது, நல்ல வேலையில்லாம, நல்ல உணவு இல்லாமா தவிக்கிறோம். எங்ககிட்ட ஆதார் கார்டு, ரேஷன் கார்டுனு எல்லா அரசு ஆவணங்களுக்கும் இருக்கு. ஆனா சாதிச் சான்றிதழ் மட்டும் இல்ல. இந்த சாதிச் சான்றிதழ் கிடைச்சா, எங்க சமூகத்துல நிறைய பேரு படிப்பாங்க, நல்ல வாழ்க்கை வாழ்வாங்க" என்று வேதனையோடு கூறினார்.
ஆசிரியராக, மருத்துவராக உருவாக வேண்டும் என கனவுகொண்ட சில மாணவிகள், தங்களின் கனவுகளை நிர்மூலமாக்கியதற்கு அரசுதான் காரணம் என்றும், அரசு சாதிச் சான்றிதழ் கொடுக்காததால்தான் தங்களால் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் பத்தாம் வகுப்போடு நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் கூறுகின்றனர்.
மாணவர்களின் பிரச்னை ஒருபுறம் என்றால், தங்களுக்கு வாழ்வாதரப் பிரச்னை உள்ளதாகப் புலம்புகின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள். ”முன்பெல்லாம் மாட்டை வைத்துப் பிழைப்பு நடத்தினோம். அப்போது சமுதாயத்தில் எங்களுக்கு ஓரளவு மதிப்பு இருந்தது. இப்போது மாட்டை வைத்து பிழைப்பு நடத்துவதை, அருவெறுப்புடன் பார்க்கின்றனர்.
அதனால், பெரும்பாலானோர் கடலோரப் பகுதியில் கிடைக்கும் சங்கு, சிப்பி போன்றவற்றை எடுத்துவந்து திரிஷ்டி கயிறு தயாரித்துச் சம்பாரித்துவருகிறோம். தற்போது இந்த ஊரடங்கினால் சுத்தமாக வருமானமே இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் இறப்புக்குப் பறையடிக்கச் செல்கின்றனர். அரசு சாதிச் சான்றிதழை வழங்கினால் பாழாய்போன எங்களது வாழ்க்கைபோல் இல்லாமல் எங்களது பிள்ளைகளின் வாழ்க்கையாவது நல்லபடியாக அமையும்” என கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல அரசு ஏற்பாடு செய்து தர வேண்டி கர்ப்பிணிப் பெண் மனு!