புதுக்கோட்டையைச் சேர்ந்த வெள்ளியம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளிதழ் ஒன்றில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
265 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 552 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படாததோடு, இட ஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. மேலும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே நபர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பதும் ஏற்கத்தக்கதல்ல.
மேலும் அரசியல்வாதிகளின் துணையோடு ஏற்கனவே பலர் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீடு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக். 05) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்து நிதிபதி இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திகார் சிறையில் உமர் காலித்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய நீதிமன்றம் உத்தரவு!