புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில், உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள அம்மா காப்பீட்டுத் திட்டப் பிரிவில், அதிநவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா காப்பீட்டுத் திட்டப் பிரிவில், மாநிலத்திலுள்ள, பிற அரசு மருத்துவமனைகளில் உள்ள காப்பீட்டுப் பிரிவுக்கு, முன்மாதிரியாக முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் நூலகவசதி, தினசரி நாளிதழ்கள் படிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டப் பிரிவுகள், மிகப்பெரிய உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய பெருநிறுவன மருத்துவமனைகளுக்கு மேலாக, அரசு மருத்துவமனை காப்பீட்டுத் திட்டப் பிரிவுகள், நவீனப்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்குத் தினமும் சுமார் நான்கு லட்சத்திற்கும், மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், 650 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 4 குழுக்களாகச் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அனைத்துவித சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அரசு தரப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட பொழுது எவ்வித நோய்த் தொற்றும் இல்லாத நிலையை இந்தியாவிலேயே தமிழ்நாடு சுகாதாரத்துறை உருவாக்கியது. தற்பொழுது கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக மருத்துவ உதவி குறித்து கேரள அரசின் சார்பில் தமிழ்நாடு அரசை அணுகினால், முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெற்றுக் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், தேவையான மருத்துவக் குழுக்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.