புதுக்கோட்டையை சேர்ந்த போதும்பொண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அருகே அக்னி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் வரும் தண்ணீர்தான் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீருக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
அக்னி ஆற்று படுகையில் சிலர் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து விவசாயத்துக்கு தண்ணீரின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே அக்னி ஆற்று படுகையில் எந்த வகையிலும் மணல் கடத்தல் நடைபெறாமல் தடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு” என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மணல் அள்ளுவதில் தகராறு: ஒருவர் கொலை!