புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே 76 வயது முதியவர் ஒருவர் தனது மகளுக்கு சீர் வரிசை கொடுப்பதற்காக, மிதிவண்டியில் பொங்கல் சீரை எடுத்துக்கொண்டதுடன் தலையில் கரும்பு கட்டை வைத்துக் கொண்டு 14 கிமீ தூரம் வரை சென்ற நெகிழ்ச்சி சம்பம் நடந்துள்ளது.
வம்பன் அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகள் சுந்தரம்பாளை ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டியை சேர்ந்த பழனி என்பவருக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்த தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
தனது மகளுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அதன் பின்பு இரட்டைக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், செல்லத்துரை கடந்த ஏழு ஆண்டுகளாக கொத்தகோட்டை கிராமத்திலிருந்து நம்பம்பட்டி கிராமத்திற்கு மிதிவண்டியில் சென்று தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்காக அவர் வம்பன் கிராமத்தில் உள்ள கடைவீதிக்கு சென்று அங்கு கரும்பு கட்டு மஞ்சள் கொத்து, தேங்காய், பூ, பழம், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் சீர் வரிசை பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்பு கட்டை மட்டும் தலையில் வைத்துக் கொண்டு மற்ற பொருட்களை மிதிவண்டியில் தொங்கவிட்டபடி 14 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கிறார்.
இதில் வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுவது அவரது தலையில் இருக்கும் கரும்பு கட்டை அவர் கையால் பிடிக்காமலேயே 14 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிளை ஓட்டி செல்வதுதான். இந்த ஆண்டும் தனது மகள் சுந்தராம்பாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக வம்பன் கிராமத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரம் கரும்பு கட்டை தலையில் பிடிக்காமல் சுமந்தவாறு மிதிவண்டியை ஓட்டி சென்ற செல்ல துறையின் செயல் அவ்வழியே சென்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: "தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு