புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தொடுத்த வழக்கின் விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (ஜன.6) விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை வரும் ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான, சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 - 2021 வரை ஆறு ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 2021, அக்டோபர் 17ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருவரிடமும் வழங்கப்பட்டன. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஒரு சில நகல்கள் விடுபட்டுள்ளதாக, விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து விடுபட்ட நகல்களை ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கோரிக்கையினை ஏற்று 17ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அப்போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய தலா 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை, விஜயபாஸ்கர் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, பூரண ஜெய் ஆனந்த் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, நீதிபதி உத்தரவின் பேரில், வழக்கின் விசாரணைக்காக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஜன.6) நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி வழக்கை மீண்டும் வரும் ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அரசியல் கடந்து சினிமாவை கைவிடாததால் தான் அவரை கலைஞர் என அழைக்கிறோம்" - நடிகர் சூர்யா புகழாரம்!