புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், "கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
இதற்கான ஒரு ஆதாரம்கூட தேசிய புலனாய்வுப் பிரிவு சேகரிக்கவில்லை. இது பாஜக செய்த ஒரு அரசியல் நாடகம். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
தேசிய புலனாய்வுப் பிரிவு பல்வேறு விசாரணை நடத்தியும், தங்கக் கடத்தல் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரம் ஒன்றுகூட திரட்ட முடியவில்லை.
கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு கூட்டணி கட்சிகளோடு இணைந்து செயல்படுவோம்" எனக் கூறினார்.