புதுக்கோட்டை: கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று (ஜன.17) திறந்து வைத்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த விடுமுறையைப் பயன்படுத்தி நன்கு படிக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சி மூலமாக படிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலில் 8 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் தொலைக்காட்சி மேம்படுத்தப்படும்
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். கல்வித் தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சியை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறது. வரும் காலங்களில் கல்வித் தொலைக்காட்சி மேம்படுத்தப்படும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வு விலக்கிற்கு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக தமிழ்நாடு முழுவதும் உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இன்று திறக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றன" என்றார். மேலும், கட்டடத்தின் தரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்து உறுதி செய்தபின்தான் திறப்பு விழாவிற்கு அனுமதியளித்தேன் என்றார்.
இதையும் படிங்க: Alanganallur Jallikattu: தொட்டுப் பார்... களத்தில் கெத்துகாட்டிய கரூர் 'வெள்ளை'