புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தில் மின்சார கம்பி ஒன்றோடு ஒன்று உரசியதில், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தில் ஆதி திராவிட தெருவில் செந்தில்குமார் - இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது மூத்த மகன் ராம்குமார் செங்கிப்பட்டியை அடுத்த முத்தாண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் ராம்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று (அக்.30) நின்றுகொண்டிருந்த போது, காற்றின் வேகத்தினால், திடீரென மின்சார கம்பி அங்குள்ள மரத்தில் மோதி, ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து, நின்றுகொண்டிருந்த மாணவர் ராம்குமார் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இந்நிலையில் ராம்குமாரின் வீட்டருகே வசித்து வரும் சந்திரா என்ற 40 வயது பெண், வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு தண்ணிர் பிடிப்பதற்காக வந்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராம்குமாரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த போது, அவருக்கும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கி பலத்த காயங்களுடன் சந்திரா மீட்கப்பட்ட நிலையில், தூக்கி வீசப்பட்ட ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த ராம்குமாரின் உடல் உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த சந்திராவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மின் விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி மேர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால் சாலையோர மரங்களை வெட்டாததால், மரத்தின் மீது உயர் மின் அழுத்த கம்பி ஒன்றுடன் ஒன்று உரசி இந்த மின்விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் மாணவர் ராம்குமார் இறந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் தந்தை இல்லாமல் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த மின் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் அணிலை பிடிக்க அட்ராசிட்டி செய்த பெண்… தேனியில் சுவாரஸ்யம்!