புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா அவதூறு பீடத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திரையரங்குகள் திறக்கப்படாத கரோனா காலத்தில், "பொன்மகள் வந்தாள்" என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. பிறகு "சூரரைப்போற்று" படமும் அதேபோல் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் இது தவிர்க்க முடியாதது. இது தற்காலிகமாக இருக்க வேண்டுமே, தவிர நிரந்தரமாக இருக்கக் கூடாது என்று அப்போது நான் கூறியிருந்தேன்.
இன்றைக்கு திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டது. அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு க்யூப் நிறுவனம் எஸ்எஸ் கட்டணத்தை குறைப்பதற்கு ஒப்புக்கொண்டு, தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு, புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறன. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை, திரையரங்கில் தான் வெளியிடுவேன் என்று படத்தின் இயக்குனர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். திமுக என்றுமே சட்டத்தை மதிக்காது. அராஜகத்திற்கு, சட்டத்தை மீறுவதற்கும் திமுகவினர் பெயர் போனவர்கள். அரசியலில் அராஜகத்திற்கு மொத்த உருவமே திமுக தான்.
தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் காலம் இருக்கின்றது. இந்தியா முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு தடை உள்ளது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி இதனை கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் அந்த நடைமுறையை கடைபிடிக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா காலத்திலும் முடங்கி விடாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஸ்டாலின்தான் நான்கு சுவற்றுக்குள் முடங்கி, மக்களை சந்திப்பதற்கு பயந்து காணொலி காட்சி மூலம் மக்களைச் சந்திக்கிறார்.
தேர்தல் வரும்போது மக்களை சந்திப்பது எப்படி என்பது அதிமுகவிற்கு தெரியும்.
மக்கள் எங்களை எந்த வகையில் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். திமுகவிற்கு ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று வெறி உள்ளது. அந்த வெறி ஒருகாலத்துலும் நடக்காது" என்றார்
நாளை(நவ.30) நடிகர் ரஜினிகாந்த் நடத்த உள்ள கூட்டத்தினால் அரசியல் தாக்கம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "ரஜினிகாந்த் வழக்கம்போல தனது மன்றத்தினருடன் ஆலோசனை நடத்துகிறார். அவர் எவ்வளவு ஆலோசனை கூட்டங்களை நடத்தி விட்டார். ஆனால் எந்த மாற்றமும் இருக்காது. அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவருடைய இஷ்டம். மாற்றத்திற்கு உட்பட்ட கட்சி அதிமுக இல்லை, என்றைக்கும் மாறாத கட்சி அதிமுக. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
திமுக தேர்தலில் ஜெயிக்காது என தங்கதமிழ்செல்வன் கூறியது குறித்து கேட்டதற்கு, "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் உடம்பில் அதிமுக ரத்தம் ஓடுகிறது" என்றார்.
இதையும் படிங்க: மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை' - அமைச்சர் தங்கமணி