புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 23 ஆம் தேதி வரை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்றார். அவருக்கு கம்பன் கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய திருச்சி சிவா, "எனது அரசியல் வாழ்வுக்கு ஒளி விளக்கு ஏற்றிய புதுக்கோட்டையை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். பிறந்து வளர்ந்த ஊரில் தேர்தல் களம் காண்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நேரத்தில், என்னை இரு கரம் கூப்பி வரவேற்று வெற்றி வீரனாய் நீங்கள் அனுப்பி வைத்ததன் தொடர்ச்சி தான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறேன். ஆகையால் புதுக்கோட்டை மண் மீதும், மக்கள் மீதும் அதிகமான அன்பும் நேசமும் உண்டு.
கம்பனை ராமாயணத்தோடு நிறுத்தியதுதான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு. பல நூல்களை எழுதியுள்ள கம்பன், கம்பராமாயணத்தின் மூலமே அவரின் புகழ் பெரிதும் பரவியது. உன்னை அண்டி பிழைக்கிறேன் என்பதற்காக சொல்வதற்கெல்லாம் தலையாட்டாமல் தனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை தேவை இல்லை என்று வெளியில் நடக்கத் தொடங்கிய கம்பன் தான் முதல் சுயமரியாதைக்காரர்.
இன்றைக்கு இருக்கிற நவீன சமுதாயம், அரசியல், உலகம் எதையெல்லாம் பெருமையோடு சொல்கிறதோ அதையெல்லாம் அன்றைக்கு நல்லிணமாக நாசுக்காக தன்னுடைய இலக்கியத்திலேயே கொண்டு வந்த மாபெரும் கவிஞன் கம்பனின் கலை விழா. அந்த கவிஞனைப் போற்ற வந்திருக்கிறேன். அந்த தமிழனின் சிறப்புகளை வேறு வேறு கோண்டத்தில் நின்று பார்க்கின்றோம்.
கம்பனுக்கு அரசியல், அறிவியல் பார்வை இருந்தது. ஆனால், அதையெல்லாம் மறக்கத் தொடங்கினார்கள். எல்லாவற்றையும் போல திரை போட்டு மறைத்தார்கள், மேக மூட்டத்தைப் போல். அவன் தனிமனித வாழ்வின் அல்லல் தெரியாமல் போனது, அவரது உள்ளத்தில் முளைத்த முற்போக்கு சிந்தனைகள் பலரால் உணரப்படாமலே போனது.
இந்த விழாவில் நாங்கள் பங்கேற்று இருப்பது எங்கள் நெறியில் நாங்கள் மாற்றம் கொள்ளவில்லை. ஆனால் கம்பன் என்ற தமிழனை, கம்பன் என்ற சிறப்பான கவிஞனை இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டெடுப்பதற்கு தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறோம். யாரையும் குறைத்து பேசவில்லை, யாரையும் பழித்து பேசவில்லை. அற்புதக்கவிஞன் கம்பனை உயர்த்தி பேசியிருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் செந்தில், நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத்தலி, சுப சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொழு நோயாளிகளின் தோழன் - 21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மணிமாறன்!