புதுக்கோட்டை: தடகள சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான எம்.எம்.அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது, "புதுக்கோட்டை மாவட்ட தடகள சங்கம் தற்போது தமிழ்நாடு தடகள சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அதுக்கு தலைவராக நான் உள்ளேன்.
இங்கு திறமையான தடகள வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட விளையாட்டு அரங்கில் சிந்தடிக் ட்ராக் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் அமைக்கப்பட்டால், சர்வதேச போட்டிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அதற்கு உண்டான நடவடிக்கைகளை தடகள சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி 'இந்தியா பாரத்' என்று தான் உள்ளது. இதில் துவங்கும் போதே இந்தியா என தான் துவங்குகிறது. அவர்களுக்கு பிடித்தவற்றை செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரத்தின் அடிப்படையில், அவர்களுக்கு பிடித்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
தற்போது ஆங்கிலத்தில் இருக்கக்கூடிய குற்றவியல் நடைமுறை வார்த்தைகளை சிலவற்றை இந்தியில் மாற்ற முடியாத சூழ்நிலையை காணலாம். அணையும் ஜோதி பிரகாசமாக எரியத்தான் செய்யும் பார்த்துக் கொள்ளலாம். இந்தியா என்றால் கொத்தடிமையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது எந்த டிக்சனரியில் உள்ளது.
இந்தியா என்றால் கொத்தடிமை என்று எந்த காரணத்தை வைத்து கூறுகின்றனர். இந்தியா என்பது பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்தது கிடையாது. அதற்கு முன்னவே, சிந்து நதி மறுபக்கம் இருந்தவர்கள் இந்தியர்கள் என வெளியில் இருந்து வந்தவர்கள் நமக்கு அளித்தது. இந்த வார்த்தைக்கு கொத்தடிமை என்றெல்லாம் அர்த்தம் கிடையாது.
நமக்காக பாஜகவினரே தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். விமர்சனம் வரட்டும், விமர்சனம் செய்தால் தான் உரையாடலை உருவாக்கும். வடநாடுகளில் சனாதனம் குறித்து பேசப்படாமலே இருந்தது. தற்போது உதயநிதி பேசியதற்கு பிறகு அது விவாதப் பொருளாக அங்கு மாறியுள்ளது. எது நல்லது என்று நினைக்கிறார்களோ, அந்த முடிவுக்கு வடநாட்டினரே வரட்டும். விவாதம் நடைபெற்றால் தான் ஒரு பிரச்சனைக்கு முடிவு வரும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் ஒரே நாடு ஒரே சுடுகாடு வரட்டும், அதன் பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிக் கொள்ளலாம். சனாதானம் குறித்து திராவிட இயக்கம் கடந்த 100 வருடங்களாகவே பேசிக் கொண்டுதான் உள்ளது. ஆனால், இது அவர்களுக்கு தான் திடீரென்று தெரிகிறது. சித்தாந்தம் பேசலாம், கொள்கைகள் போல என்ன வேண்டுமாலும் பேசலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாரத்’ என்பது எங்கிருந்து உருவானது? - ஒரு வரலாற்று பார்வை!