புதுக்கோட்டை நகர காங்கிரஸ் நிர்வாகி பாலசுப்பிரமணியனின் படத்திறப்பு விழா நேற்று (ஆக. 4) நடைபெற்றது. திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு படத்தைத் திறந்துவைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "இந்திய அரசியலில் நீங்கா இடம்பெற்றவர் கருணாநிதி. அரசியல் மட்டுமல்லாது திரைப்படத் துறை உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவராக இருந்தார்.
விடுதலைப் போராட்ட தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரின் படமும் சட்டப்பேரவையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கருணாநிதி படமும் சட்டப்பேரவையில் திறந்துவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சியினருக்குத் தலைவர் உயிரோடு இருக்கும்போது அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அந்தத் தலைவர் மறைந்த பின்னர் அரசியல் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். அந்த வரிசையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டிருக்க வேண்டும்.
கேந்திர வித்யாலயா புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய ஆட்சியரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் திமுக அரசிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நடைமுறைப்படுத்திவருகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வரும் பட்ஜெட் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர 1,17,562 மாணவர்கள் பதிவு