திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் இணைய வழியிலான உறுப்பினர் சேர்க்கை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் புதுக்கோட்டையில் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெண்கள் உள்பட ஏராளமான உறுப்பினர்கள் இணைய வழியில் திமுகவில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர். அப்போது, பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி, “ஒரே நாளில் ஒரு லட்சம் உறுப்பினரை சேர்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். உறுப்பினர்களை மற்ற இயக்கங்கள் போல போலியாக சேர்ப்பது கிடையாது. உண்மையான உறுப்பினர்களை திமுக சேர்த்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்து சம்பிரதாயத்திற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று தினங்கள் கூட்டப்பட்டது. அதில் இரண்டு தினங்கள் மட்டுமே சட்டப்பேரவை நடந்தன.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை. பல்வேறு மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைந்தபட்சம் ஆறு தினங்கள் நடத்தி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர்- செந்தில் பாலாஜி