புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி இன்று, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்குளத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள் நடைபெறாதபோது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இத்திட்ட பயனாளிகள் 88,141 பேருக்கு நிவாரணமாக 2 நாட்கள் ஊதியம் தலா ரூ. 448 வீதம் ரூ.3,94,87,168 மதிப்பில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படுவதை குறிக்கோளாக கொண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலங்கள் தவிர பிற இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளைத் தொடங்கிட கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,89,465 பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகள், 775 தொகுப்புகளில் சிறிய குழுக்களைக் கொண்டு பணிகள் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் பாசனம், நீர் மேலாண்மை பணிகளான கால்வாய் சீரமைத்தல், நீர்பிடிப்புகள் அமைத்தல் போன்ற தனிநபர், சமுதாயம் பயன்பெறும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் தற்போது 316 ஊராட்சிகளில் 491 தொகுப்புகளில் 6,692 நபர்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பணிக்கு வருபவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பணிகள் மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கை கைழுவுதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், தீவிர நோய்கள், உடல் உபாதைகள் உள்ள நபர்கள் தவிர்க்கப்படுகின்றனர். பணித்தளத்தில் புகைப்பிடித்தல், கைபேசி பயன்படுத்துதல், வாகனங்களில் பணிக்கு வருதல், கூட்டாக அமர்ந்து உணவு உண்ணுதல் போன்றவற்றைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடிமராமத்துப் பணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர்