தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில், முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்களிடம் வலியுறுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. இந்நிலையில், கிராமியக் கலைஞர் ஒருவர், மக்களிடத்தில் வடிவேலு கெட்டப்பில் சென்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். கிராமிய கலைஞரான இவர் கரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவர்.
இருப்பினும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுபோல் வேடமணிந்து கிராமிய நிகழ்ச்சிகளில் பொதுமக்களை கவர்ந்து வந்த இளவரசன், அவரது சொந்த ஊரான கலபம் கிராமத்தில் கரோனா மூன்றாவது அலை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வடிவேலு போல வேடமணிந்து, அவரைப்போல உடல் பாவனையால் நடித்து முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும், கைகளை முறையாக எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்து நடித்து காட்டி அனைவரையும் கவர்ந்தார். மேலும், மக்களுக்கும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் கிராமியக் கலைஞர் இளவரசன் வடிவேலுவை போல் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போலி ரெய்டு: 1 பெண் உள்பட 6 பேர் கைது