புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 5 சதவிகித லைசால், 1 சதவிகித ஹைப்போ குளோரைடு கரைசல் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2,000த்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் தொற்று பரவாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை