அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கடந்த 18ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த தம்பதியினருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களின் ஒன்றரை வயது குழந்தைக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக புதுக்கோட்டை அரசு இராணியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு டாக்டர்.பாபு ஆனந்த் தலைமையிலான குழு சிகிச்சையளித்து வந்தது. குழந்தை பூரண குணமடையும் வகையில் சிகிச்சையளிக்கப்பட்டது மருத்துவர்களின் மிகப் பெரிய சாதனையாகும். அதேபோன்று குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் போது உடன் அவரது தாயார் தங்கவேண்டிய கட்டாய சூழலில், குழந்தையின் தாயிக்கு நோய் தொற்று ஏற்படாமல் மருத்துவர்கள் பார்த்துக்கொண்டது அரசு மருத்துவர்களால் வழங்கப்பட்டு வரும் உயர்தர சிகிச்சைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது" என்றார்.
இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் பேசியபோது, "கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை டாக்டர்கள் மீட்டெடுத்திருப்பது ஒரு பெரிய சாதனை. அதுவும் செயற்கை சுவாசத்தை தவிர்த்தது மிகப்பெரிய மைல்கல். நோய் தொற்று இல்லாத குழந்தையின் தாய் உடனாளராக இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையிலும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு கவசம் கொடுத்து மருத்துவர்கள் பாதுகாத்துள்ளனர்.
ஏழு நாட்கள் குழந்தையுடன் இருந்த தாய்க்கு நோய் தொற்று ஏற்படாமல் மருத்துவர்கள் பார்த்துக்கொண்டது மிகப்பெரிய சாதனை. குழந்தைக்கு அதிக விலையுள்ள நோய் எதிர்ப்பு மருந்துகளும் ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டதால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'பசியால் உயிரிழந்து விடுவோம்' - வேதனையில் மீனவப் பெண்கள்!