புதுக்கோட்டை: இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமை நடைபெற்று நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதியில் இரட்டை குவளை முறை மற்றும் கோவிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிக்கப்படாதது தெரிந்து வழக்குகள் பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் விசாரணை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து தீண்டாமை சம்பவம் நடந்த நிலையில், அதைத் தொடர்ச்சியாக அறந்தாங்கி பகுதியில் குளத்தில் குளிப்பது பிற்படுத்தப்பட்ட மக்களை அவதூறாக திட்டி மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் தீண்டாமை சம்பவம் நடந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே கீழையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி தனது குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துள்ளார். அப்போது அவருக்கு உடனடியாக வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆசிரியர்கள் அந்த குடிநீர் பாட்டிலை சோதனை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த மாணவியிடமும், மற்ற மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அந்த பாட்டிலில் இருந்த குடிநீருடன் சிறுநீர் கலந்திருப்பது ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக, இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அந்த பள்ளிக்குச் சென்ற கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், குடிநீரில் சிறுநீர் கலந்தது 2 மாணவர்கள் என தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த 2 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழை வழங்கி, அந்த 2 மாணவர்களின் எதிர்கால படிப்பு பாதிக்காத வகையில் இருவரையும் வெவ்வேறு அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ள மற்றொறு தீண்டாமை சம்பவமாக இருக்கக்கூடுமோ? என்று பொதுமக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "அரசின் பெருமை பேசுவதை விடுத்து, மாணவர்களை கவனிக்க வழி செய்க" - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!