தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை, அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உணவகங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, உணவகங்களின் உரிமையாளருக்கு ”டெங்கு கொசுக்கள் ஒழிப்போம், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்” குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை இயக்கமானது கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக குழுக்கள் கண்காணிக்கப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள உணவகங்கள் , பொது இடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பதே கிடையாது. அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் மட்டும் இதுவரை, 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்
இதனையடுத்து, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென ஆய்வை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உணவகங்களில் சமைக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். மேலும், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதமாக ஏதேனும் தண்ணீர் தேங்கிய இடங்கள் வீடுகளில் இருந்தால் கண்டிப்பாக அபராதாங்கள் வசூலிக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க : வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?