புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி அலுவலக வாசலில் ஜனநாயக துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து தங்களது கோரிக்கைகளை கோஷமாக எழுப்பினர். விநாயகருக்கும், விஜயபாஸ்கருக்கும்தான் அனுமதி தருகிறார்கள், நாங்கள் எங்களது வாழ்க்கைக்கு போராடுவதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஜனநாயக துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர், தமிழக அரசாங்கம் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.