நாடு முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கண்டனங்களை பதிவுசெய்துவருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த ஊர்வலம் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட 10 பெண்கள் உட்பட 160 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி:
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கத்தினர் இன்று திருச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொருளாதார சீரழிவை சித்தரிக்கும் வகையில் ஒருவருக்கு பிணம் வேடமிட்டு பாடை கட்டி ஒப்பாரி வைத்து தூக்கிச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்துதரக்கோரியும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 100 நாள்களிலிருந்து 200 நாள்களாக உயர்த்தி வழங்கக்கோரியும் விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.