புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய அவர், "பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் தான் ஒரு விவசாயி என்று கூறுவது உண்மை என்றால், போராடும் விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை? விவசாய சட்டங்கள் நியாயமானது என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அதற்காக போராடும் விவசாயிகளை ஏன் அவர் சந்திக்க முயற்சிக்கவில்லை.
இந்த பத்தாண்டுகளில் அதிமுக செய்த சாதனை என்ன. தூத்துக்குடி துப்பாக்கி சூடுதான் இவர்கள் செய்த சாதனை. அம்மா வழியில் நல்லாட்சி என்று கூறுகிறார்கள். அம்மா ஆட்சி நல்லாட்சியா. அம்மா ஆட்சி பொல்லாத ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். மத்திய பாஜக அரசு நாளை ஒரே நாடு ஒரே கட்சி என்று கூறும் அதற்கு அடுத்து ஒரே நாடு ஒரே தலைவன் என்று கூறும். அமெரிக்க மக்கள் விழித்தெழுந்து அங்கு அதிபரை மாற்றியது போன்று, இந்தியாவிலும் இன்னும் மூன்று ஆண்டுகளில் பொதுமக்கள் விழித்து எழுந்து ஆட்சி மாற்றத்தை உருவாக்குவார்கள். அதற்கு வெள்ளோட்டம்தான் இந்த சட்டப்பேரவைத் தேர்தல்.
இதில் மிகப்பெரிய வெற்றியை நாம் தேட வேண்டும். போராடும் விவசாயிகள் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு அழைத்துள்ளது. விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா. பாஜகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தது விபரீதமான கூட்டணி. அதிமுகவில் பண பலம், அதிகார பலம், ஆள் பலம் ஆகியவை உள்ளன. பாஜகவிடம் பண பலம், மிருக பலம், அதிகார பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை உள்ளது.
நாள்தோறும் முதலமைச்சர் விளம்பரம் ஒருபக்கம், துணை முதலமைச்சர் விளம்பரம் ஒருபக்கம் என்று வருகிறது. முதலமைச்சர் விளம்பரத்தில் துணை முதலமைச்சர் படம் கிடையாது, துணைமுதலமைச்சர் விளம்பரத்தில் முதலமைச்சர் படம் கிடையாது. அதிமுக ஒரு கட்சியா இரண்டு கட்சியா என்பதே பலருக்கு தெரியாது" என தெவித்தார்.
இதையும் படிங்க: மேகமலையில் தொழிலாளியை விரட்டும் காட்டு யானை: அச்சமூட்டும் காணொலி