புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தற்போது சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமத்தில் சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து வரும் மக்கள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்தப்புகாரின் அடிப்படையில் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த 105 நாட்களாக, சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுவரை சிபிசிஐடி காவல் துறையினர் இறையூர், வேங்கைவயல், காவிரி நகர், கீழமுத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை செய்து உள்ளனர். இதனிடையே தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா தலைமையில் இந்த வழக்குச் சம்பந்தமாக ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் குடிநீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதக்கழிவுதான் என்பது உறுதியானது.
இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 105 தினங்களாக 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி சார்பில், புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவின் அடிப்படையில் புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்புக் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், மேற்கண்ட 11 நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும்; அதற்கு பார்த்திபன் என்ற அதிகாரி தலைமையில் இவர்களிடம் டிஎன்ஏ சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் கூறிய வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த 9 நபர்களிடமும், காவிரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச்சேர்ந்த தலா ஒருவரிடமும் டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட 11 பேருக்கும் கடிதம் அளிக்கப்பட்டு, கடந்த 25ஆம் தேதி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரி நகர் பகுதியை சேர்ந்த காசி, ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் முத்தையா ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அதன்படி அவர்களிடம் டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
இந்த 11 பேருக்கும் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளும்பட்சத்தில் இவர்கள் குற்றவாளி என்று கருத முடியாது.
ஆனால், ஏற்கனவே நடைபெற்ற பகுப்பாய்வு சோதனையில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என உறுதி செய்யப்பட்டதில், இந்த 11 பேருக்கும் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு அந்த மூன்று பேர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு முடியாதபட்சத்தில் விசாரிக்கப்பட்ட 147 பேரிடமும் இந்த சோதனை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த முடிவுகள் வெளியாக சுமார் மூன்று மாத காலம் ஆகும் என்பது கூடுதல் தகவலாக உள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை செய்ய புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றம், 11 பேருக்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மூன்று பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர். மீதமுள்ள 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே 147 நபர்களை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்ற நிலையில் 11 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு நீதி மன்றத்தில் அனுமதிபெற்று மூன்று பேர் ரத்த மாதிரி டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் வேங்கை வயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சாட்சிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா தலைமையிலான ஒரு நபர் குழு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் தங்களுடைய விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவத்தன்று வேங்கைவயல் பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் வெளியூரிலிருந்து வரும் மக்கள் ஊருக்குள் செல்ல சிபிசிஐடி போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மகன் முதல்முறையாக தேர்தலில் போட்டி - மகனுக்காக விட்டுக்கொடுத்த எடியூரப்பா!