புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஏற்பாட்டின் பேரில் கல்விக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி கடன் பெறுவதற்கு வந்திருந்தனர். அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னோடி வங்கி ஒத்துழைப்போடு மாவட்டத்தில் உள்ள பல வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்விக்கடன் வழங்கல் முகாமை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க ஆலோசகர் வணங்காமுடி, ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் ஒப்புதல் கடிதத்தை அமைச்சர் மெய்யநாதன், எம்.பி. அப்துல்லா ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கல்வி கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமின் மூலம் அனைவருக்கும் கல்வி கடன் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதன் பின்னர் பேசிய மாநிலங்களை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, “மத்திய அரசின் உதவியோடு வித்தியாலட்சுமி போர்டல் என்ற இணையதளம் மூலமாக மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவைகள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்தந்த வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அந்த வங்கிகள் மாணவ மாணவிகளுக்கு கடன் வழங்கும். இந்த முகாம் மூலமாக அனைவருக்கும் கல்வி கடன் கிடைக்கவும் எந்த விதமான நிராகரிப்பு இன்றி கல்வி கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பார்க்க கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டம் உள்ளது. அதை முறையாக வங்கியாளர்கள் கடைபிடிப்பதில்லை, அவர்களுக்கும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. வித்யாலட்சுமி போர்டல் என்ற இணையதளம் இருப்பது பலருக்குத் தெரியாமல் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதன் பின்னர் பேசிய தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாளராக ஆலோசகர் வணங்காமுடி, “வித்யாலட்சுமி போர்டல் மூலமாக விண்ணப்பங்கள் அப்லோட் செய்யப்பட்டு, அந்த விண்ணப்பங்கள் வங்கிக்கு வந்து சேரும் எந்த வங்கியிடமிருந்து கடன் பெற வேண்டும் என்பதை மாணவர்களை இதன் மூலம் முடிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் வங்கி மேலாளர் மாணவர்களை அழைத்து அப்லோடு செய்யப்பட்ட டாக்குமெண்டின் ஒரிஜினலை சரி பார்த்து கடன்களை வழங்குவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக..! அடுத்த திட்டம் என்ன..?