அரிமளம்- கே.புதுப்பட்டியின் 4 கிலோ மீட்டர் சாலையை சுள்ளாம்பட்டி, தேமக்கம்பட்டி, மணப்பட்டி, கோவில்வாசல், இசுகுபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், 2 கிமீ சாலை அரிமளம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சாலை உரிய பராமரிப்பு இல்லாததால், குண்டும் குழியுமாக மாறி அப்பகுதி மக்களால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள சுமார் 2 கிமீ ஊராட்சி சாலையிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல முறை அலுவலர்களிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச்4) காலை அரிமளம்- கே.புதுப்பட்டி சாலையில் அய்யனார் கோயில் ஆர்ச் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி, பேரூராட்சி கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அலுவலர்கள் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரிமளம்-கே.புதுப்பட்டி சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், "பழுதடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதியளித்தபடி உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மீண்டும் மக்களை திரட்டி போராடுவோம்” என்றனர்.
இதையும் படிங்க: உத்திரகாவேரி ஆற்றில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!