புதுக்கோட்டை: வெட்டன்விடுதி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இதில் முருகானந்தம் ஊரக வளர்ச்சி துறை அலுவலராக உள்ளார். ரவிச்சந்திரன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வருகிறார். பழனிவேல் ஒப்பந்ததாரராக உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று பேரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகளில் தெரு விளக்குகள் அமைக்கும் டெண்டர் எடுத்து நடத்தி வந்தனர். இது தவிர அரசு விளம்பர பதாகைகள் வைக்கும் ஒப்பந்தமும் எடுத்து செய்து வந்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. அண்மையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
தற்போது வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் வீடு, அலுவலகங்கள் உள்பட எட்டு இடங்களில் காலை 7 மணி முதல் 30க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வருகை