புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து அமெரிக்கா நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐநா சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்தில் இளமுருகு முத்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “வேங்கைவயல் விவகாரத்தில் 182 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. குற்றவாளி யார் என்று தமிழ்நாடு அரசுக்கு தெரியும், இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது.
அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் வேங்கைவயல் விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு அரசு துணைச் செயலர், தேசிய தாழ்த்தப்பட்டேர் ஆணையம், மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களிடம் புகார் அளித்தோம், ஆனால் இங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டுகிறது. அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறது. அதனாலையே இந்த விவகாரத்தில் நீதி வேண்டி, ஐநா மனித உரிமை ஆணையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகார் மனு கொடுத்திருந்தோம்.
அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக கூறியுள்ளோம், ஜெனிவாவில் மனித உரிமை கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டுள்ளேன், அப்படி ஜெனிவாவில் நடைபெற உள்ள மாநாட்டில் இது குறித்து உலக அளவிலான பிரச்னையாக பார்க்கப்படும்.
வேங்கைவயலில் நடந்தது ஒட்டுமொத்த மனித குலத்தின் ஏற்றுக் கொள்ள முடியாத இழிவான செயல், வேங்கைவயல் விவகாரத்தை பொருத்தவரையில் இதுவரையில் விசாரணை முறையாக போகவில்லை, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரை இந்த விவகாரத்தில் சந்திக்க பலமுறை அவகாசம் கேட்டும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை, இந்த விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஜாதி அரசியல் தான் செய்கிறார்கள், உயர் சமூகத்தினரின் அரவணைப்பு தங்களுக்கு இருந்தால் போதும் என நினைக்கின்றனர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!