புதுக்கோட்டை: குன்றாண்டார்கோவில் ஒன்றியம், தெம்மாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர், கருப்பையா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இறந்து விட்டார். இந்நிலையில் அந்தத் தலைவர் பொறுப்புக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரெங்கநாயகி என்பவர் பொறுப்பு ஏற்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுப்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இரண்டாவது வார்டு உறுப்பினர், நான்காவது வார்டு உறுப்பினர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் தங்கப்பொண்ணு (ஊராட்சி மன்ற செயலர் திருநாவுக்கரசின் அண்ணன் மனைவி) மற்றும் ஊராட்சி மன்ற செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ரெங்கநாயகியை பொறுப்பேற்க விடாமல் ஒரு தலைபட்சமாக நடந்து வருவதாகவும், இதனால் ஊராட்சியை செயல்படாமல் தடுப்பதாகவும் மற்ற (துணைத் தலைவர் ரெங்கநாயகி உள்பட) 6 வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தலைவரை தேர்ந்தெடுக்க பெரும்பான்மை அதிகமாக இருந்தும் தங்களை பொறுப்பேற்க விடாமல், இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக மூன்று முறை கூட்ட அறிவிப்பு கொடுத்தும் இந்த தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கும் இரண்டாவது கையொப்ப நபர் தேர்ந்தெடுப்பதற்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 10ஆம் தேதியன்று தெம்மாவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி செயலர் திருநாவுக்கரசின் அண்ணன் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் தங்கப்பொண்ணுவின் கணவருமாகிய சிவலிங்கம் கூட்டத்தில் நுழைந்து தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றக்கூடாது எனவும், மீறி தீர்மானங்கள் நிறைவேற்றினால் தீர்மான நோட்டுகளை கிழித்து விடுவேன் என்றும் தகாத வார்த்தைகளால் கூறி தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தகராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும், சாதிய ரீதியிலான பாகுபாட்டை பயன்படுத்தி முட்டுக்கட்டைப் போடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க சாதிரீதியாக முட்டுக்கட்டைப் போடும் இரண்டு, நான்கு, ஐந்தாவது வார்டு உறுப்பினர்கள் மற்றும் செயலர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெம்மாவூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: டீ மாஸ்டர் வெட்டி படுகொலை.. ஒரே வாரத்தில் 5வது கொலை.. தென்காசியில் நடந்தது என்ன?