அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 15ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டுமென அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார். விருப்ப மனுக்களை வாங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்வம் காட்டினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஐய பாஸ்கர், 'எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தாண்டி அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றிபெற்றதோ, அதேபோல வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வரும் சட்டபேரவைத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றிபெறும்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ' திமுக தலைவர் ஸ்டாலின் போகின்ற இடம் எல்லாம் உளறிக்கொண்டு பேசி வருகிறார். அதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கக்கூடிய கட்சியாக அதிமுக திகழ்வதாக' பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100% வெற்றிபெறும் - அமைச்சர் தங்கமணி