கரோனா பணிகள் குறித்து ஆய்வு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக நேற்று (அக்22,.) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ஐடிசி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மையமாக திகழும் கவிநாடு கண்மாய் பகுதியை பார்வையிட்ட முதலமைச்சருக்கு, அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி குறித்து ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சிறு, குறு தொழில் அதிபர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டால் எவ்வித பயனும் இல்லை என்று கூறிவருகிறார். ஆனால் விராலிமலை ஐடிசி நிறுவனமே அதிமுக அரசின் சாதனைகளின் சான்று. இந்தாண்டு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அவை ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
விராலிமலையில் உணவுப் பொருட்கள் உற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆயிரத்து 77 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஐடிசி நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனுடைய (ஐடிசி நிறுவனம்) செயல்பாட்டில் முதற்கட்டமாக இதுவரையில் சுமார் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 800 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 85விழுக்காட்டிற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதிமுக அரசின் செயல்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
கடந்த முறை நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 213 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 303 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கு தயாராகி வருகின்றனர். இதுவரை 194 நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் ஜனவரி மாதத்தில் கரூர் மற்றும் புதுக்கோட்டையில் எனது தலைமையில் அடிக்கல் நாட்டப்படும்.
தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தால் காவிரி நீர் பாயும் பகுதிகளில் நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, அந்த நீர் கடைமடை பகுதி வரை சென்று விவசாயிகள் அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர். இதன்காரணமாக, கடந்த ஆண்டுகளில் 23 லட்சம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு இதுவரை 38 லட்சம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கல்லணை கால்வாய் சீரமைப்பதற்கு 2000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும். புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2020-21 ஆம் ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, புதிய பல் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடித்தவுடன் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக இலவசமாக தடுப்பூசி போடப்படும்” என்றார்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!